சித்த மருத்துவத்தில் ஒற்றடம் என்னும் இலைக்கிழி ஒற்றடம் புற மருத்துவ முறை

VYM-Othadam.jpg

சித்த மருத்துவத்தில் ஒற்றடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றும் நம் வீடுகளில் வலிகளுக்கு ஒற்றடமும், சுளுக்கு மற்றும் ரத்தக்கட்டுக்கு ஐஸ்கட்டி எனப்படும் குளிர்ந்த நீரோட்டம் கொண்டு ஒற்றடம் வைக்கும் வழக்கம் உள்ளது. புற மருத்துவ சிகிச்சையில் ஒன்றான ஒற்றடம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெப்பத்தை உண்டாக்கப் பயன்படுகிறது. சுண்ணாம்புக்காரை, தவிடு, செங்கல்பொடி, மணல், மூலிகை இலைகள் முதலியவற்றில் ஏதாவது ஒன்றை வறுத்து துணியில் முடிந்து நோயுள்ள இடத்தில் ஒற்றி எடுத்தல் இலைக்கிழி ஒற்றடம் எனப்படுகிறது.

சூடு ஒத்தடம்

சூடு ஒத்தடத்தின் மூலம் உடம்பில் வியர்வை ஏற்படுத்துதல் முக்கியமாகும். இலைக்கிழி ஒற்றட முறையானது, மெழுகு ஒத்தடம், மணல் ஒத்தடம், போல ஒரு வகை சூடு ஒத்தட வகை ஆகும்.

இலைக்கிழி ஒற்றடம்:

சில மூலிகை இலைகளை நோயின் தன்மைக்கு ஏற்றவாறு சேர்த்து மூலிகை எண்ணெயில் வதக்கி, அதனை பருத்தித் துணியில் பொட்டணமாகக் கட்டி அதை சூடு பண்ணி அதனையொட்டி நோய் உள்ள இடத்தில் ஒத்தடம் இடலாம்.

தேவையான மூலிகை இலைகளும், பொருட்களும்:

– எருக்கு இலை
– வாதநாராயணன் இலை
– புளிய இலை
– முருங்கை இலை
– ஆமணக்கு இலை
– நொச்சி இலை
– தேங்காய்த்துருவல்
– பூண்டு

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை இலைகளில் எது கிடைக்கிறதோ தேவையான அளவு அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை செய்யும் முறை

– உதவியாளர் மூலிகைகளை மண்சட்டியில் சிறிது மூலிகை எண்ணெய் ஊற்றி வதக்கி பிறகு பருத்தித் துணிகளில் மூட்டைகட்டி இரண்டு கிழிகளை தயார் செய்ய வேண்டும்.

– சிகிச்சையாளர் நோயாளியை அதற்குரிய மேஜையில் படுக்க வைக்க வேண்டும்.

– உதவியாளர் கிழிகளை மண் சட்டியில் வைத்து சூடு செய்து சிகிச்சை அளிப்பவரிடம் கொடுக்க வேண்டும்.

– சிகிச்சை அளிப்பவர், நோயாளியின் உடல் முழுவதுமோ அல்லது பாதிக்கப்பட்ட பகுதியிலோ மிதமான சூட்டுடன் உள்ள கிழிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

– கிழியின் சூடு குறையும் போது, உதவியாளர் சூடு செய்த மற்றொரு கிழியை சிகிச்சையாளரிடம் கொடுக்க வேண்டும்.

– சிகிச்சை நேரம் முடிந்த பிறகு நோயாளியை வெந்நீரில் குளிக்க வைக்க வேண்டும்.

– சிகிச்சை நேரம் அநேகமாக 30 நிமிடங்கள் ஆகலாம்.

இலைக்கிழி ஒற்றட சிகிச்சையின் பலன்கள்:

– உடல் வலி குறையும்
– உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகும்
– தசைநார்களின் இறுக்கம் குறையும்
– கீல்வாதம் குணமடைய உதவியாக இருக்கும்
– சூடு ஒற்றடம் வியர்வையை ஏற்படுத்தும் என்பதால் உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் வழியாக உடல் – – – கழிவுகள் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.

இலைக்கிழி சிகிச்சையை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது

– உடலில் தீக்காயம் உள்ளவர்கள்
– தோல் நோய்கள் உள்ளவர்கள்
– வாந்தி, பேதி உள்ளவர்கள், அதனை ஏற்படுத்த மருந்து எடுத்துக் கொண்டவர்கள்
– பித்த நோயாளிகள்
– கர்ப்பிணிகள்
– தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
– மூன்று வயது குறைந்த பெண்கள் முதலியவர்களுக்கு இலைக்கிழி சிகிச்சை அளிக்க கூடாது.

சிகிச்சைக்கு பயன்படுத்தும் இலைக்கிழிகளை மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம். பிறகு புதிய இலையை தயார் செய்ய வேண்டும். புதிய நோயாளிகளுக்கு புதிய இலைகளை பயன்படுத்த வேண்டும். ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட இலைக்கிழிகளை இன்னொரு நோயாளிக்கு பயன்படுத்தக் கூடாது.