எலும்பு முறிவு கட்டு என்னும் புறமருத்துவம்

VYM-TW-LI-fracture-kattu.jpg

சித்த மருத்துவத்தில் கட்டு கட்டுகின்ற முறை  ஒருவகை புற மருத்துவம் ஆகும்.  கட்டு மருத்துவம் பல வகைப்படும். எலும்பு முறிவு ஏற்படும் போது எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியை  துல்லியமாகச் சேர்த்து, முறையாக துணி சுற்றி, எலும்புப் பகுதி விலகாமல், மூங்கில் பட்டை போன்றவற்றை வைத்து எலும்புக்கூடும் வரை கட்டு போடுவது எலும்பு முறிவு கட்டு அல்லது என்பு முறிவு கட்டு மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

சில நேரங்களில் மூட்டுகள் விலக நேரிடும் போதும்,  நழுவ நேரிடும் போதும், அதையும் ஒழுங்குபடுத்தி துணியினால் சேர்த்து கட்டி சரியான முறையில் மூலிகைகள் மற்றும் எண்ணெய் கட்டு போடுவதற்கும் கட்டு என்று பெயர்.

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு அடி வயிற்றில் உண்டான தசைத் தளர்விற்கு கட்டு போட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு செய்யப்படும் கட்டு முறைகளும் உள்ளன.

புண்கள் உண்டானபோது மருந்துகள் வைத்து வெளிக்கிருமிகள் உள்ளே செல்லாதவாறு சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டுப் போடும் முறையும் உண்டு.

வெட்டுக் காயத்திலிருந்து ரத்தம் வடிந்தால் உதிரமடக்கி பச்சிலையை கசக்கி அல்லது அரைத்துக் கட்ட உடனே ரத்தம் வெளியாகுதல்  நிற்கும்.

எலும்பொட்டி  தழை என்று ஒன்று உள்ளது. இதனை இன்றளவும் கிராமப்புறங்களில் மக்கள் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளுக்கும், வெளிப்பிரயோகமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

எலும்பு முறிவுக்கான கட்டு முறைகள்:

இன்றைக்கு பல்வேறு வாகன விபத்துகளிலும், பல நிகழ்வுகளிலும், எலும்பு முறிவு சாதாரணமாக நிகழ்கிறது.  அதனால் உடற்கூறு பற்றி அடிப்படை அறிவு இருந்தால் இந்த மாதிரியான கட்டுகளை எளிதில் போடலாம். சித்த  மருத்துவத்தில் பல முறைகள் கையாளப்படுகின்றன.  முக்கியமாக எலும்பு இடம்பெயர்ந்த பகுதியை பழைய நிலையில் துல்லியமாக சேர்த்து மீண்டும் விலகிப் போகாமல், கவனமாக நிதானித்து கட்டை போடுவதே கட்டின் சிறப்பம்சமாகும்.

எலும்பு முறிவுக்கு எண்ணை கட்டு,  முட்டை மாவுக்கட்டு,  மூலிகைக்கட்டு  என பல கட்டுகள் உள்ளன. இன்றும் பல ஊர்களில் ஊரின் பெயரால் இந்தக் கட்டுகள் உள்ளன. அவை பெரும்பாலும் அவர்களது அனுபவ முறைகளைக் கொண்டு  பாரம்பரியமாக செய்து கொண்டு வருவதாகும்.

எலும்பு முறிவில் எந்த கட்டு போட்டாலும் கண்டிப்பாக மட்டை அல்லது பட்டை இவற்றை வைத்து கட்ட வேண்டும்.  முறிவு ஏற்பட்ட பகுதியில் தசையை கிழித்துக்கொண்டு தோலுக்கு வெளியே எலும்பு வரும் சூழ்நிலையில் எலும்பை உட்செலுத்தி, அது வெளிப்பட்ட இடத்தில் சீழ்பிடிக்காத காயத்திருமேனி எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

மாவுக்கட்டு, மூலிகைக்கட்டு, முட்டை பற்றுக் கட்டு,  ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒரு முறை அவிழ்த்து புதிய பஞ்சால் பொதிந்து கட்ட வேண்டும்.

எலும்பு  ஒடிவுக்கு முதலில் எண்ணெய்க் கட்டுப் போட்டுவிட்டு எலும்பு ஊறிச் சேர ஆரம்பித்து நகராத நிலையில்  பின்னர் உறுதியாகும் வரை முட்டைப்பற்று கட்டு போடலாம். மற்றபடி அனுபவம் வாய்ந்த பரம்பரை வைத்தியர்களிடமும் கட்டுப்போடலாம்.

முட்டை மாவுக்கட்டு

உளுந்து மாவு, கற்றாழைச்சாறு, நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு, இவைகளை தேவையான அளவு ஒன்றோடு ஒன்று சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். எலும்பு முறிவுப் பகுதியை ஒன்றுசேர்த்து, உள்பகுதியில் சுற்றி பஞ்சு வைத்து, அதன் மீது ஒரு அடுக்கு துணி சுற்றி, அதன் மீது வைத்து கட்டுப் போட்டுவிட்டு மேலும் அதன் மீது சுற்றும் துணியில் மேற்கண்ட கலவையை பூசி சுற்றிக் கட்ட வேண்டும்.

எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியை சரி செய்து பஞ்சு வைத்து பின் மட்டை வைத்து உளுந்து மாவை முட்டையின் வெள்ளைக் கருவில் குழைத்து துணியில் தேய்த்துக் கட்டுப்போட அசையாதிருந்தால் எலும்பு ஊறிச் சேரும்.

மூலிகைக்கட்டு

எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியை துல்லியமாகச் சேர்த்து, பின் பஞ்சினால் பொதிந்து அதன் மீது பட்டை வைத்து, பின் அதன் மீது வெளியில் துணி சுற்றும்போது, வல்லாரை அல்லது முருங்கை இலைச்சாறு, ஓரிதழ் தாமரை, பிரண்டை வேர், முறிவெண்ணெய் சேர்த்து அரைத்து விழுது அல்லது மூடில்லாத் தாளிச் சாறு இவைகளில் ஏதேனும் ஒன்றை தடவி துணி சுற்ற, அவை பசை போன்று உலர்ந்து உறுதியாகிவிடும்.  இவ்வாறான மூலிகைக்கட்டை 10 நாட்களுக்கு ஒரு தடவை அவிழ்த்து எலும்பு உடைந்த பகுதியை உற்றுக் கவனித்து, மீண்டும் இதைப்போன்று ஒரு கட்டை எலும்பு முறிவு சேர்ந்து உறுதியாகும் வரை போட வேண்டும்.

வர்ம நூல்களில் எலும்பு முறிவுக்கட்டு போட முறிவெண்ணெய் பல கூறப்பட்டுள்ளன. அவ்வாறு காயத்திருமேனி தைலம் பற்றிய குறிப்பு அதில் உள்ளது. சில இடங்களில் தென்னைமரக்குடி எண்ணையை முறிவெண்ணெயாக பயன்படுத்துகின்றனர்.

முறிவெண்ணெய் செய்வது எப்படி?

முறிவெண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்

பிரண்டைச் சாறு – ஒரு லிட்டர்

நல்லெண்ணெய் – ஒரு லிட்டர்

பிரண்டை வேர் கல்கமாக – 80 கிராம் அளவுக்குச் சேர்க்கவும்

முறிவெண்ணெய் செய்முறை

பிரண்டை வேரை பொடி செய்து பிரண்டை சாறு விட்டரைத்து கல்கமாக அரைத்த விழுது, பிரண்டைச் சாறு,  நல்லெண்ணெய், இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் ஏற்றி தைலமாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதனை எலும்பு முறிவுகளில் போட்டுக் கட்ட வீக்கம் வடிந்து எலும்பு ஒடிவு விரைவாக ஊறிச் சேரும்.

இவ்வாறாக சித்த மருத்துவத்தில் பல வட்டாரங்களில் எலும்பு முறிவுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள். இதனை ஒழுங்குபடுத்தி நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தேவைப்படும் நவீன பரிசோதனைகளுக்கு   உட்படுத்தி, மருத்துவம் பார்த்தோமேயானால் தேவையற்ற பின்விளைவுகளை தடுக்கலாம்.