டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டால் என்னென்ன சாப்பிடலாம்

VYM-typhoid.jpg

“சால்மோனெல்லா” என்னும் பாக்டீரியாக்களால் டைபாய்ட் காய்ச்சல் வருகிறது. மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் தான் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கால்வலியுடன் நோய்  தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். பசி குறையும், குமட்டல், வாந்தி, வயிற்று வலி, ஆகியவற்றின் தொல்லை இருக்கும். உடல் சோர்வடையும். சரி, டைபாய்டு ஏற்பட்டால் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?

இக்காய்ச்சலை குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் நோய் விரைவில் குணமாகும். சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீருடன், ஏலாதி மாத்திரை, பாவனக்கடுக்காய், சாந்தசந்திரோதய மாத்திரைகளை உள்ளுக்கு கொடுக்கலாம். மோர் போன்ற  குறைவான உணவுகளை தரலாம்.

டைபாய்டு பெரும்பாலும் குடிநீர், உணவு, பால் ஆகியவற்றால் பரவுகிறது. இந்தக் காய்ச்சலின் போது உடலின் வெப்பம் 40லிருந்து 50 விழுக்காடு அதிகரிக்கும். புரத பாதிப்பானது மூன்று மடங்கு அதிகரிக்கும். இந்தக் காய்ச்சலில் சிறு குடல் புண்ணாகி ரத்தம் வடிதல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். இவை நோயின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும்.

இதனை கட்டுப்படுத்தாவிட்டால் கல்லீரல், மண்ணீரல் ஆகியவை அதிக பாதிப்புக்கு உள்ளாகும்.  நோய்க்கான மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் உணவுக் கட்டுப்பாடு என்பது டைபாய்டு காய்ச்சலை பொறுத்தவரை மிகவும் முக்கியமானது ஆகும்.

டைபாய்டு காய்ச்சலுக்கான உணவு  எப்படி இருக்க வேண்டும்?

– காரம் இல்லாத எளிதில் செரிக்கக்கூடிய உணவை மட்டுமே தரவேண்டும்.

– பட்டினி போடவே கூடாது. வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே குடல் புண் சீக்கிரம் ஆறும்.

– நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

– நோயை சரியாக கண்டுபிடித்து அதற்குரிய மருந்து சாப்பிட வேண்டும். இருப்பினும் காய்ச்சல் குறைந்த பின் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

– புழுங்கல் அரிசி கஞ்சியை வடிகட்டி தண்ணீரை மட்டும் சிறிது உப்பு சேர்த்து  காலையிலும் மாலையிலும்  உட்கொள்வது நல்லது.

– நிலவேம்பு, நன்னாரி, சீந்தில், திராட்சை, நெல்லி வற்றல், அதிமதுரம்,  விலாமிச்சவேர் கஷாயம் ஆகியவை நல்ல குணம் தரும்.

டைபாய்டு காய்ச்சலுக்கான  உணவுத் திட்டம்

அதிகாலை – பால்

காலை – இட்லி / பொங்கல் / எண்ணெய் குறைவான தோசை / இடியாப்பம் / எலுமிச்சம்பழம் பானம்.

நடுப்பகல் – பால் (இதில் ஏலக்காய் சுக்கு ஆகியவற்றை சேர்த்து கொடுக்கலாம்)

மதியம் – நன்றாக குழைக்கப்பட்ட சோறு, காய்கறி சூப், வாழைப்பழம் / பாசிப்பயிறு சேர்த்த சாம்பார் / மீன் குழம்பு

மாலை – அவித்த பால் – முட்டை / கிழங்கு வகைகள், வாழைப்பழம்

இரவு படுக்கும் முன் – குழைக்கப்பட்ட சோறு / முட்டை / இடியாப்பம் / வேகவைத்த பருப்பு பால்

மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் எளிதில் செரிக்கக் கூடியதாகவும், அதிக அளவு புரதம் மற்றும் கலோரிகள் நிறைந்தும் இருக்கும். இதில் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளும், பழங்களும் உடலுக்கு தேவையான வைட்டமின்களையும், தாதுக்களையும் பெற உதவுகின்றன.

இன்னொரு விஷயம் கவனித்துப் பார்த்தால் இந்த உணவுத் திட்டத்தில் எண்ணெயில் வறுத்த உணவுகள், இனிப்பு பண்டங்கள், ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன.