தூய வாழ்வு தரும் துளசி

Tulasi-Siddha-1200x630.jpg

மருத்துவத்தையும் மத நம்பிக்கையையும் ஒன்றிணைக்கும் பல மூலிகைகளில் மிகச்சிறந்தது, நாம் எங்கும் எளிதில் காணக்கூடிய துளசி. காட்டிலும், நாட்டிலும், வீட்டிலும் பரவலாக வளரும் இச்செடி, இல்லங்களிலும், ஆலயங்களிலும், வழிபாட்டுக்குப் பயன்படும் பேறு பெற்றதாகும். அதற்குக் காரணம், உடலையும், உள்ளத்தையும், தூய்மைப் படுத்தும் குணம் அதற்கு உள்ளது தான்.

காட்டுத்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என்று பல வகைகள் இருந்தாலும், கிருஷ்ண துளசி, கற்பூரத் துளசி, காட்டுத்துளசி போன்ற வகைகளே மருத்துவர்களாலும், மக்களாலும் பெரிதும் பயன்படுத்தப்படுபவை.

காட்டுத்துளசி அல்லது Hoary Basil என்ற வகையைச் சில இடங்களில் நாய்த்துளசி என்றும் கூறுவதுண்டு. இவையன்றி திருநீற்றுப் பச்சை என்றழைக்கப்படும் இராமத்துளசி (Common Basil) கூட Lamiaceae என்ற தாவரப் பெயரால் குறிக்கப்படுவதுண்டு.

மணம் பரப்பும் குத்துச்செடியான துளசியின் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு மாறுதலைப் பெற்றிருந்தாலும், அனைத்துமே சுமார் மூன்றடி உயரம் வரை மண்டி வளரக் கூடியவையாகும். காட்டிலும், வீட்டின் முற்றத்திலோ அல்லது பின்புறமோ மாடத்தில் வழிபாட்டிற்காக வளர்க்கப்படும் துளசிச்செடி, தன மணத்தாலும், குணத்தாலும் பற்பல மருத்துவ மற்றும் மனோதத்துவப் பலன்களைத் தரக்கூடிய ஆற்றலைப் பெற்றது.

நுண்ணிய மயிர்ப் போர்வையால் மூடப்பட்ட மெல்லிய இதன் தண்டுப் பகுதியிலிருந்து, மேல் நோக்கி வளரும் இதன் சிறு கிளைகளில், சொரசொரப்பான பச்சை நிற இலைகளும், சிறிய இடைவெளிகளுடன் பிரமிடு போன்று கூறாக மேல் நோக்கி முளைக்கும் பூங்கோத்துகளைக் கொண்டது. வெள்ளையும், மேன்பழுப்பு நிறங்களிலும் வளரும் இப்பூக்களில் சிறிய சிறிய விதைகளைக் காணலாம். கிருஷ்ண துளசி எனப்படும் கருந்துளசி மற்றும் கற்பூரத் துளசியின் விதைக் கூடுகள் தண்ணீரில் இடப்பட்டால், அவற்றைச் சுற்றி சவ்வுப்படலம் தோன்றுவதில்லை. ஆனால் நாயத்துளசியின் விதைகளுக்கு அவ்வாறான படலம் தோன்றும். (துளசியை வளர்த்து வழிபடும் இல்லத்தரசிகள் இதனை கவனிக்கவும்).

துளசியின் அனைத்து பகுதிகளும் மருத்துவப் பயன்களைக் கொண்டவையானாலும், வகையைப் பொருத்து சில குணங்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ காணப்படலாம். பொதுவாக இருமல், காய்ச்சல், சளி, கிருமித்தொல்லை, படர்தாமரை, சிறுநீர் அடைப்பு, மூச்சடைப்பு, போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் துளசியின் அனைத்து வகைகளுக்கும் உண்டு.

வகைப்படுத்தி ஆராய்ந்தால், கற்பூரத் துளசிக்கு கண் நோய், காயங்கள், வைரஸ் காய்ச்சல், வாதநோய், போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை உண்டு. நாயத்துளசிக்கு மூலம், ஒரு பக்க தலைவலி, வாந்தி, மலேரியா, பசியின்மை, ஆகியவற்றை குணமாக்கும் தன்மை உண்டு.

பர்பரி என்று வடமொழியிலும், இராமத்துளசி என்று மலையாளத்திலும், Common Basil என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படும் திருநீற்றுப் பச்சைக்கு மேற்கூறிய நோய்களை மட்டுமில்லாமல், மூட்டுவலி, தாதுபல குறைபாடு, தோல் நிறமாற்றம், செரியாமை, வாய்நாற்றம், மாதவிடாய் தவறுதல், குமட்டல் போன்ற நோய்களையும் போக்கும் அரிய மருந்தாகும்.

பாவப் பிரகாசம், கையதேவ நிகண்டு, கேரள வைத்தியர்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் நூலான சகசரயோகம், அட்டாங்க இருதயம் ஆகிய பண்டைய மருத்துவ நூல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ள துளசியை, நம் நாட்டில் அழிக்க முடியாத சக்திகளாக விளங்கும் கொசு, ஈ, போன்றவற்றின் தொல்லைகளில் இருந்து விடுபட பயன்படுத்தியுள்ளனர். இன்று அதற்காகப் பயன்படுத்தி வரும் தூவல்களில் (Spray) கூட துளசியும் ஒரு மூலப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது.

துளசி, சுக்கு, ஓமம், மஞ்சள்பொடி, மிளகு, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை தூய வெந்நீரில் இட்டு கொதிக்க வைத்து உண்டாக்கிய கொதிநீர் (decoction) முன்பொரு சமயம் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவியபோது பல ஏழைக் குடும்பங்களுக்கு எளிய நிவாரணமாக பயன்பட்டது.

கேரளா கிராமங்களில் பல வயதான பெரியவர்கள், துளை, கருவேலம்பட்டை, திப்பிலி, கிராம்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றால் உண்டாக்கிய பல்பொடியைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி, ஆரோக்கியமான ஒளிரும் பற்களுடன் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது பிரபலமாகி வரும் அனேக மூலிகைப் பொருட்களில் துளசி ஒரு இன்றியமையாத பொருளாக விளங்குகிறது. ஏனெனில் அதிலுள்ள யூஜினால், கார்வக்ரோல், காரியோபைலின், எப்பிஜெனின்-7, உர்சொலிக் அமிலம் (இந்த அமிலம் தர்பை புல்லிலும் உண்டு) , ஆகிய வேதிப் பொருட்கள் பலவித நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.

உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தித் தியானத்திலும் வழிபாட்டிலும் லயித்துச் சாதனைகள் நிகழ்த்தப் பேருதவி செய்யும் மூலிகை துளசியே என்று பழைய நூலான “காந்தர்வ தந்திரா” விவரிக்கிறது. அதனால் தான் தீவிர ஆன்மீகச் சிந்தனைக்காகப் பெரியோர்கள் துளசி வனத்தை நாடுகின்றனர். துளசியையும், விஷ்ணு சாலக்கிராமத்தையும் அருகருகே வைத்து வழிபட்டால், அருட்செல்வமும், பொருட்செல்வமும் பெருகும் என்று ஆன்றோர் கூறுவார்.

வடமொழியில் “விஷ்ணுபிரியா” என்றும், சித்த மருத்துவத்தில் “மால் அலங்கல்” என்றும் அழைக்கப்படும் துளசியின் புனிதத்துவமும், மருத்துவப் பயன்களும் வெளிநாடுகளில் பிரபலமானது 15ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே.

அனைத்துத் துளை வகையிலும், கற்பூரத் துளசியைப் பற்றிய குறிப்பு மட்டும் பண்டைய மருத்துவ நூல்களான சரக சம்கிதை, சாற்றுத சம்கிதை, அட்டாங்க இருதயம் போன்றவற்றில் இடம் பெறாதது வியப்பை அளிக்கிறது.

1903ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாளில் லண்டன் மாநகரில் இருந்து வெளியான “தி டைம்ஸ்” என்ற ஆங்கில நாளேட்டில், மரு. ஜார்ஜ் பேர்ட்வுட் (Dr. Jeorge Bird Wood) என்ற மும்பை கிரான்ட் மருத்துவ கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் எழுதிய கடிதம் துளசியைப் பற்றிய சுவையான செய்தி ஒன்றைத் தருகிறது. மும்பை விக்டோரியா தோட்டம் அமைக்கப் படும்போது, அளவற்ற கொசுத்தொல்லையால் அலுவலர்கள் அவதிப்பட, அதைச் சமாளிக்க அந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே துளசி செடிகளை நட்டு வைக்க, அவை வளர வளரக் கொசுக்கூட்டம் மாயமாக மறைந்துவிட்டதாகவும் அவர் தன கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். (நம் நாட்டில் அறிவியல் பூர்வமான ஆன்மீக உண்மைகள், வெற்று நாட்டினர் வாய் வார்த்தையாக வந்தால்தான் ஏற்கப்படும் என்பது தெரிந்தது தானே!)

துளசி என்றால் “நிகரற்றது” என்று பொருள் என்பது நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான உண்மையும் கூட.