குழந்தைகளுக்கு ஏற்படும் குடற்புழுக்களை சித்த மருத்துவத்தில் நீக்கும் முறை

VYM-Worms-Siddha-1200x630.jpg

குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது குடற்கிருமிகள் ஆகும். ஏனெனில் விளையாட்டுப் பருவமாகிய பிள்ளைப் பருவத்தில் மண்ணிலிருந்தும், கழிவிலிருந்தும், சுகாதார முறைகளை கடை பிடிக்காததாலும் குடற்கிருமிகள் குழந்தைகளை வந்தடைகின்றன. இதனால் குழந்தைகளுக்கு ரத்தசோகை, சத்துப் பற்றாக்குறை நோய்கள் உண்டாகின்றன.

குடற்கிருமிகளில் கொக்கிப்புழு, நாடாப்புழு,  தட்டைப்புழு,  கீரைப்புழு என பல வகைகள் உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் குடற்புழுக்களை சித்த மருத்துவத்தில் நீக்கும் முறைகளைப் பற்றி இங்கே நாம் பார்ப்போம்.

சித்தர்கள் கூறிய நோயில்லா நெறிமுறைப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறை பேதிக்கு மருந்து கொடுத்து வந்தால் இந்த குடற் கிருமிகள் தொந்தரவு இருக்காது.

நோய் வரும் வழிகள்

  1. தூய்மையற்ற, மலம் கலந்த மண்ணில் விளையாடுதல்.
  2. மண்ணைத் தின்பதாலும் ஈ மொய்த்த பண்டம் உண்பதாலும்.
  3. சரியாக சமைக்காத பன்றி, மாட்டு இறைச்சிகள் உண்பதாலும்.
  4. கெட்டுப்போன தயிர், அழுகிய பழம், காய்கறி உண்பதாலும்.
  5. சுகாதாரமற்ற கழிப்பிடம் பயன்படுத்துவதாலும்.
  6. நாய், பூனைகளுடன் நெருக்கமாக பழகுவதாலும் வரும்

நோயின் குறி குணம்

  1. தொப்புளைச் சுற்றி வலி, வயிறு உப்புசம், தூக்கத்தில் பற்களைக் கடித்தல், வலிப்பு.
  2. மலவாயில் அரிப்பு, செரியாமை, கழிச்சல்.
  3. வாந்தி, சுரம் உண்டாதல்.
  4. குழந்தைகள் வன்மை குறைந்து சோபை அல்லது பாண்டு நோயும், தோலில் நிரமாறல், தடிப்பு, அரிப்பு, தினவு, சிரங்கு உண்டாகலாம்.
  5. குழந்தை சரிவர உண்ணாமல் இருத்தல்.

மேற்கூறிய அறிகுறிகள் தெரிந்தால் குடற்புழுக்கள் இருக்கலாம்.

வழக்கத்திலுள்ள மருந்து முறைகள்

  1. குப்பைமேனி தைலம் – குப்பைமேனி சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து காய்ச்சி 7-25 கிராம் வரை வயதுக்குத் தக்கபடி தரவும்.
  2. மாந்த எண்ணெய் – உத்தாமணி சாறு, உப்பு, வசம்பு, சுட்டகரி, விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுக்க புழு வெளிப்படும்.
  3. அகத்திக் கீரையை வேக வைத்து வடித்த நீரில் பனங்கற்கண்டு சேர்த்து 80-160 மிலி தரவும்.
  4. வேப்பங்கொழுந்தை நெய்விட்டு வதக்கி பின் உப்பு சேர்த்து மை போல் அரைத்து 60-150 மிலி வரை தரவும்.
  5. முருகன் விதை மாத்திரை தரவும்.
  6. சுண்டைக்காய் சமைத்து சாப்பிடலாம்.
  7. குப்பைமேனி வேரை அரைத்து கற்கமாக காலையில் வெறும் வயிற்றில் தரலாம்.
  8. வாய்விடங்கம் பொடி செய்து இரண்டு 2 கிராம் அளவு தரலாம்.
  9. காக்கரட்டான் மாத்திரை தரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *