தலையில் பொடுகு தொல்லையா?

Podugu-venthayam-1200x630.jpg

சபையில் நான்கு பேருக்கு மத்தியில் தலையில் கைவைத்து சொரிந்து கொண்டிருப்பது சங்கடம் தான். பொடுகுத் தொல்லையால் வரும் இந்த வேதனை சொல்லி மாளாது. பொடுகைப் போக்கும் எளிமையான சிகிச்சை இதோ.

தேவையான பொருட்கள்

வெந்தயம் – 200 கிராம்
எட்டிப் பருப்பு – 100 கிராம்
நிலவேம்பு – 100 கிராம்
கருஞ்சீரகம் – 100 கிராம்
சோற்று கற்றாழை – 400 கிராம்
பச்சரிசி களைந்த நீர் – 400 மிலி
வாயகன்ற மண் சட்டி – 1

செய்முறை

வெந்தயத்தை மண்சட்டியில் போட்டு சோற்றுக்கற்றாழை சோறு 400 கிராம் சேர்த்து மூடி வைத்து 10 மணி நேரம் கழித்து வெந்தயத்தை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து கொள்ளவும்.

எட்டிப்பருப்பை நசுக்கி மண் சட்டியில் போட்டு பச்சரிசி களைந்த நீர் 400 மில்லி ஊற்றி மூடி வைக்கவும். மூன்று மணி நேரம் கழித்து அடுப்பில் வைத்து, சிறு தீயாக எரித்து, பாதியாகச் சுண்டியதும், இறக்கி, ஆற விட்டு, பருப்பை மட்டும் எடுத்து நிழலில் காயவைத்து, இடித்து பொடி செய்து கொள்ளவும்.

நிலவேம்பை இடித்து பொடி செய்து கொள்ளவும். கருஞ்சீரகத்தை கழுவி, உலர்த்தி, பொடியாக இடித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அனைத்து பொடிகளையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

குளிக்கப் போகும் முன் தேவையான அளவு பொடியை எடுத்து சூடான நீரில் கலந்து சந்தனம் போல் அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் தலை முழுகவும். ஒருநாள் விட்டு ஒருநாள் ஏழு முறை குளித்தால் தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சொறி இவைகள் நீங்கும். தலைமுடியும் கொட்டாது.

குறிப்பு

பொடியைத் தேய்த்து தலைமுழுகிய அன்று எண்ணை தடவி தலை சீவுதல் கூடாது.