வீட்டிலேயே குங்குமம் தயாரிக்கலாம்

VYM-kungumam.jpg

முன்பெல்லாம் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுவதும், நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. இவை முகப்பொலிவை மட்டும் தரவில்லை. முகத்தில் உண்டாகும் நோய் தாக்குதலில் இருந்து பெண்களை காப்பாற்றின. ஆனால் இன்றோ முகத்திற்கு பொலிவைத் தரும் க்ரீம்களை அப்பிக் கொள்வதும், ஸ்டிக்கர் பொட்டுகளையும், பல நிற சாந்துகளையும் நவீனம் என்று கூறி இட்டுக் கொள்வதும், அதனால் ஒவ்வாமை உண்டாவதும், அதற்கு மருத்துவமனைகளை நாடுவதும் வழக்கமாகிவிட்டது.

அதனடிப்படையில் பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை தயாரிப்பது எப்படி என்பதையும், நல்ல குங்குமத்தின் மருத்துவ பலன்களையும் ஆராய்வோம்.

குங்குமம் தயாரிக்க தேவையான பொருட்கள்

குண்டு மஞ்சள் – 100 கிராம்
வெங்காரம் – 10 கிராம்
படிகாரம் – 10 கிராம்
நல்லெண்ணெய் தேவையான அளவு
எலுமிச்சை சாறு – அரை மூடி

முகச்சவரம் செய்வதற்கும், வாசலில் திருஷ்டிக்கும் இந்த படிகாரத்தை பயன்படுத்துவார்கள். வெண்காரம் என்பது கற்கண்டு வடிவத்தில், நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது வெண்காரம். இரண்டும் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

குங்குமம் செய்முறை

வெண்காரம், படிகாரம், இவை இரண்டையும் உடைத்து வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் இரண்டையும் தனித்தனியாக போட்டு, பொடி செய்து கொள்ளவும். நன்கு பொடி செய்ததும் இவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து அரைக்கும்போது அதன் நிறம் பழுப்பு நிறமாகி கொஞ்சம் ஈரப்பசையுடன் இருக்கும். மஞ்சளை சிறு சிறு துண்டாக உடைத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். பொடித்து வைத்துள்ள மஞ்சள் மற்றும் வெண்காரம்-படிகார கலவையை தயாராக எடுத்து வைக்கவும். எலுமிச்சை பழச்சாறுடன் பொடித்து வைத்துள்ள வெண்காரம்-படிகாரம் கலந்து வைக்கவும். இந்த கரைசலுடன் மஞ்சள் பொடியை கலந்து ஒரு பிளாஸ்டிக் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் தட்டில் வைத்து பரப்பி உலர விடவும்.

நன்கு உலர்ந்த பிறகு செங்கல் தூள் நிறத்தில் இது இருக்கும். இதில் நல்லெண்ணெய் சிறிது சிறிதாக சேர்த்து லேசாக பிசறி விடவும் அப்போதுதான் நல்ல அடர் சிவப்பு (டார்க் மெரூன்) நிறத்தில் குங்குமம் கிடைக்கும். மஞ்சளின் வாசனையுடன் ஒரிஜினல் குங்குமம் ரெடி.

சில சமயம் நமக்கு கிடைக்கும் நல்ல குங்குமத்தில், மல்லிகை அல்லது தாழம்பூ மனம் கமழும். நாம் தயாரித்த குங்குமத்துடன் மல்லிகை அல்லது தாழம்பூ எசன்ஸ்களை இரண்டு அல்லது மூன்று துளி விட்டு கலந்து விட்டால் இந்த மனம் கிடைக்கும். தேவைப்பட்டால் இப்படி மணம் ஏற்றியும் விடலாம்.

குங்குமம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

வெண்காரம், படிகாரம், மஞ்சள், இந்த மொன்றையும் எப்படி அரைக்கிறோம் எந்தப்பில் தான் நல்ல குங்குமத்தின் சூட்சுமம் இருக்கிறது. எவ்வளவு நைசாக அரைக்க முடியுமோ அப்படி அரைத்து கொள்ளுங்கள். நல்லெண்ணெய் அதிகம் சேர்த்து விட கூடாது. பிறகு மண் வாசனை போய் நல்லெண்ணை வாசம்தான் குங்குமத்தில் இருக்கும். இதில் கூடுதல் கவனம் தேவை.

குங்குமத்தின் நன்மைகள்

  • நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதால் உடலில் உஷ்ண நிலையை சரிசமமாக வைத்துக் கொள்ள அது உதவுகிறது.
  • அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரும் பழக்கம் உள்ளது. சில கோவில்களில் குங்குமத்தை தண்ணீரில் கரைத்துக் கொடுப்பார்கள். அதனால் தீராத வயிற்றுவலி தீர்ந்ததாகச் சொல்லுவார்கள். அதற்கு காரணம், குங்குமம் தயாரிப்பில் உள்ள மஞ்சள், படிகாரம் போன்றவையே ஆகும். இரண்டுமே கிருமி நாசினியாகவும், புண்களை ஆற்றும் தன்மை உடையதாகவும் செயல்படுவதால் இந்த மருத்துவப் பயன்கள்.

ஆகவே இவ்வளவு மருத்துவ பயனுள்ள குங்குமத்தை இயற்கையாக செய்து பயன்படுத்தினால் உடலுக்கு மட்டுமல்ல தோலுக்கும் நல்லது. இதற்கு மாறாக வேதிப் பொருள்களால் ஆன குங்குமத்தை பயன்படுத்தினால் நெற்றியில் ஒவ்வாமை ஏற்பட்டு, தோல் கருமையாக மாறும். எனவே இயற்கையாக நாமே குங்குமத்தை வீட்டில் தயாரித்து பலன் அடைவோம்.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Copyright by Dr Velayudam 2018. All rights reserved.