உடலுக்கு ஏற்றம் தரும் மலையேற்றம்

VYM-Trekking-in-Tamil.jpg

இன்றைக்கு மாடிப்படி ஏறினாலோ நமக்கு மூச்சு முட்டுகிறது. ஆனால் நம் பாட்டன், பூட்டன்கள் காட்டு பாதைகளைக் கடந்து கரடு முரடான மலைகளில் ஏறி சிகரத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனை தரிசித்து விட்டு  வீடு திரும்பியதை கதை கதையாகச் சொல்ல கேட்டிருப்போம். என்னுடைய தாத்தா கம்பு விதைத்துவிட்டு திருப்பதி கிளம்புவார், நடை பயணம் சென்று உச்சி மலை ஏறிய பிறகு  அவர் திரும்பி வருகையில் கதிர் விளைந்திருக்கும், வந்ததும் அறுவடைக்கு தயாராவார்  என கிராமத்து அம்மாக்கள் பூரிப்புடன் சொல்வார்கள். உடலுக்கு ஏற்றம் தந்த மலையேற்றம் பற்றி தொகுப்பு இதோ.

இன்றைக்கு ரோப்கார்கள், பேருந்துகள் போன்றவற்றின் மூலம் மூலவர் இருக்கும் வரை செல்லும் வசதிகள் வந்துவிட்டது. என்றாலும் இப்பொழுது கூட பல திருப்பதி,  பழனி,  சபரிமலை,  போன்ற ஆன்மீகத் தலங்களுக்கு  நடைபயணமாக சென்று இறைவனை  தரிசித்து வருகிறார்கள்.

பொதுவாக மூலிகைகள் உடலுக்கு நன்மையும்,மனதுக்கு அமைதியும் தரும் என்பதால் மலைப் பயணங்களை மன அமைதிப் பயணங்களாகவே நம் முன்னோர்கள் கைகொண்டார்கள. உதாரணமாக, பர்வதமலை, சதுரகிரி ஆகிய மலைகளில் காணப்படுகிற மூலிகைகளும், தீர்த்தங்களும் பல நோய்களை தீர்க்கும் குணம் உடையது. இந்த மலைகளின் மூலிகை கலந்த காற்று பட்டால் பல நோய்கள் குணமாவதாக பலர் தங்களின் அனுபவங்களைச் சொல்லி நாம் கேட்டிருக்கலாம்.

அதேபோல் பழனியில் கால் வைத்தாலே பாதி நோய் தீர்ந்துவிடும். உச்சி மலை ஏறிவிட்டால் முழு நோயும் குணமாகும் என்பார்கள். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது அங்குள்ள சிலை, தீர்த்தம் ஆகியவை. அந்த வகையில் பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது நவபாசான சிலை ஆகும்.

அப்படி திருப்பதி,சபரிமலை,மற்றும் கைலாய மலை வரை அதன் மகிமைகளையும், சிறப்பம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம். வாகன வசதிகள் இல்லாத காலத்தில் மாதக்கணக்கில் மலை, கோயில்களுக்கெல்லாம் நடந்தே சென்று நம் முன்னோர்கள் இறை தரிசனம் செய்தார்கள்.

அதுபோல நாம் இப்போது நடந்து செல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால் படியேற இயலாதவர்கள, வயதானவர்கள் தவிர மற்றவர்கள் ரோப் கார்களை தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் பயணத்தின் நிஜமான பலனை அடையலாம்.

இன்றைய வணிக யுகத்தில் ஒரு பயிற்சியாகவும், பாடமாகவும் அதனை பயிற்று வைக்கலாம். மலையேற்றம் என்பது உடல் தசைகளை வலிமைப்படுத்துவதாகவும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் மனோதிடத்தையும் அதிகரிக்க மலையேற்றம் உதவுவதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் இயற்கை, எழில் சூழ்ந்த மலை உச்சிகளில் நம் முன்னோர்கள் வழிப்பாட்டுத் தலங்களை அமைத்ததன் உண்மையை புரிந்துகொண்டால் மலை கோவில் தரிசனம் மனதிற்கும், உடலுக்கும் நலம் தரும் என்பதில் மாற்று கருத்தில்லை.

சமதரையில் ஓடுவதை விட வேகமாக மலை ஏறினால் என்ன நன்மைகள்?

சாய்வு  உட்பகுதியில் நடப்பதால் கால்களினால் மிக அதிக உட்சவேகத்தில்  நடக்க முடியாது. எனவே உங்கள் தசைகள் ஒரு விதத்தில் பாதுகாக்கப்படுகின்றன அதேசமயம் உங்கள் பின்புற தசைகள் மிகவும் உறுதிப் படுத்தப்படுகின்றன.

சாய்வு பகுதியில் நடப்பதால் நீங்கள் முன்புறமாக குனிந்தபடியே தான் நடப்பீர்கள்.உங்களையும் அறியாமல் மலைப்பகுதிகளில் உடலை எப்படி வைத்து நடக்க வேண்டும் என்று பயிற்சி பெறுகிறீர்கள். உங்கள் கைகள் இரண்டும் இணைந்து அதிக வலிமையுடன் செயல்படுகின்றன. இதன் மூலம் கை, தோள் மற்றும் கால் ஆகியவற்றிற்கு இடையேயான ஒருங்கிணைப்பு அற்புதமாக உண்டாகிறது. மலையேற்றத்திற்கு பிறகு சமதரைப் பகுதியில் ஓடும் போதும் அந்த பயிற்சி உங்கள் ஒருங்கிணைப்புக்கு மிகவும் உதவும். மலைப் பகுதியில் குறைந்த தூரம் ஏறினாலே அதிக கலோரிகளை எரிக்க முடியும் என்பது கூடுதல் நன்மை.

முக்கியமாக இயற்கை பகுதி என்பதால் சுற்றியுள்ள தாவரங்கள் அளிக்கும் தூய பிராணவாயுவும், காற்றில் நிலவும் கலப்படமற்ற தூய்மையும்,  உடலுக்கு நிச்சயம் நல்லது தரும். தொடர்ந்து மலையேற்றம் மற்றும் மலையோட்டம் செய்பவர்களின் உடலைக் கவனியுங்கள். நன்கு உருண்டு திரண்டு இருக்கும்.

தொடர்ந்து ஜிம் செல்பவர்கள் மற்றும் எடை தூக்கும் பயிற்சி செய்பவர்களின் உடலைப் போல உறுதி மிக்கதாக இருக்கும். இதயநோய் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகே மலையேற்றம் மற்றும்  மலையோட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும். சிரமம் பார்க்காமல் உழைத்தால் சாதனை சிகரம் தொடலாம் என்ற வாழ்க்கைப் பாடத்தை மௌனமாகச் சொல்கின்றன மலைகள்.