விட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகள்

VYM-Vit-D-Deficiency-Tamil.jpg

விட்டமின்-டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு விட்டமின் வகை ஆகும். கால்சியம் மற்றும் பாஸ்பரசை உறிஞ்சி சரியான நோயெதிர்ப்பு மண்டலத்தை அது உருவாக்கிறது. வலுவான எலும்புகளுக்கு இந்த வைட்டமின் மிகவும் அவசியமாகும். விட்டமின்-டி இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அதில் D-2 உணவிலிருந்தும், D-3 சூரிய ஒளியிலிருந்தும் கிடைக்க கூடியதாகும். விட்டமின்-டி குறைபாடு தோன்றாமல் இருக்க விட்டமின்-டி சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

விட்டமின்-டி யின் பொதுவான பலன்கள்

  • விட்டமின்-டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அதை எளிமையாக்கவும், தசை வேலைப்பாடுகளையும், இதயத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • விட்டமின்-டி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை உடல் உறிஞ்சஉதவி செய்து எலும்புகளை வலிமையாக்குகிறது.

சில நோய்களுக்கும் விட்டமின்-டிக்கும் உள்ள தொடர்புகள்

மல்டிபிள் ஸ்க்ளிரோசிசுக்கும் விட்டமின்-டிக்கும் உள்ள தொடர்பு

மல்டிபிள் ஸ்க்ளிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை வளர்ச்சிக்கும், எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், மனச்சோர்வை குறைக்கவும் உதவுகிறது. ரத்தத்தில் விட்டமின்-டி சத்து அதிகமாக இருக்கும்போது இந்த நோயின் பாதிப்பு குறைகிறது. விட்டமின்-டி க்கும், ஸ்க்ளிரோசிஸ்க்கும் உள்ள தொடர்பை பற்றி விளக்கமாக தெரியவில்லை. ஆனாலும் சூரிய ஒளியை அதிகம் பெறுபவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் குறையும் எனவும், சூரிய ஒளி குறைவாக பெறுபவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாகும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, விட்டமின்-டி சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நன்மையாகும்.

நீரிழிவு நோய்க்கும் விட்டமின்-டிக்கும் உள்ள தொடர்பு

உடல் இன்சுலின் பயன்பாட்டை எடுக்காமல் இருந்தால் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரித்து டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. விட்டமின்-டி கால்சியம் சத்தை உறிஞ்சுவதால் சர்க்கரை அளவை நிர்வகிக்கும் பணியை செய்கிறது. விட்டமின்-டி குறைபாடு உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. விட்டமின்-டி ரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா எனவும், வைட்டமின்-டி மாத்திரைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தமா எனவும் மருத்துவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எடை குறைப்புக்கும் விட்டமின்-டிக்கும் உள்ள தொடர்பு

விட்டமின்-டி குறையும் பொது  உடல் பருமன் ஏற்படுகிறது. இளம் வயதில் விட்டமின்-டி குறைபாடு இருந்தால் வயது அதிகரிக்கும்போது உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மனச்சோர்வுக்கும் விட்டமின்-டிக்கும் உள்ள தொடர்பு

விட்டமின்-டி உடலில் குறையும்போது மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. மனச்சோர்வுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் வைட்டமின்-டி சத்துள்ள மாத்திரைகளையும் சேர்த்து  எடுத்துக் கொள்ளும் போது விரைவில் மனச்சோர்வு குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சூரிய ஒளியின் அவசியம்

வைட்டமின்-டி எளிதில் உடலில் சேர்வதற்கு சூரிய ஒளி சருமத்தில் படுவது அவசியம். குறிப்பாக புற ஊதா B-கதிர்கள் படுவதால் வைட்டமின்-டி சத்து கிடைக்கிறது. நம் தோளில் அதிகமாக வெயில்படும் பொழுது அதிகமான விட்டமின்-டி சத்து கிடைக்கிறது. தினமும் பொதுவாக காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலான நேரத்தில் சூரிய ஒளி நம் உடலில் படுமாறு அரை மணி நேரம் இருந்தால் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின்-டி நமக்கு கிடைத்துவிடும். வைட்டமின்-டி சத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் குறைபாடு ஏற்படாமல் உடல் ஆரோக்கியத்தை நாம் மிக எளிதில் மேம்படுத்த ஒரு அருமையான முயற்சி இது என்றால் அது மிகையாகாது.

நமது உடம்பு நன்றாக இயங்குவதற்கு எலும்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதன் ஆரோக்கியத்தில் தான் நமது இயக்க சக்தி உள்ளது. அதற்கு தேவையானவை விட்டமின்-டி மூலமே கிடைக்கும். எலும்புக்குத்  தேவையான வைட்டமின்-டி இயற்கையான முறையில் சூரிய ஒளி மூலம் நமது உடலுக்கு  கிடைக்கப்படுகிறது. மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு உடலில் விட்டமின்-டி அளவு குறைவாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

விட்டமின்-டி குறைபாடு ஏற்பட காரணங்கள் என்ன

    • நம் மீது சூரிய ஒளி படாமல் இருப்பது.
    • பூட்டின கதவுகள், சன்னல் திரைகள் மூலம் வெளிச்சம் உள்ளே வர முடியாத நகர வாழ்க்கை முறைகள்.
    • காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளேயே முடங்கி செய்யப்படும் நவீன வேலைகள்.
    • சிலருக்கு மரபு ரீதியாகவும் இந்தக்குறைபாடு ஏற்பட காரணம் அமையலாம்.
    • உடற்பயிற்சி இல்லாமை மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மாசு ஆகியவைகளும் ஒரு காரணம்.
    • சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்தின் (ஸ்டிராய்ட் மற்றும் வலிப்பு நோய்க்கு எடுக்கும் மருந்துகள்) பாதிப்பாலும் விட்டமின்-டி குறைபாடு ஏற்படும் தன்மை

உடலுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வைட்டமின் தேவைப்படும்?

  • ஒரு நாளைக்கு பிறந்த குழந்தை என்றால் 400 இ.யூ. தேவை.
  • 2 முதல் 10 வயது உள்ள குழந்தை என்றால் 800 இ.யூ.
  • இளம் வயதினருக்கு 1000 இ.யூ. மிகாமல் தேவை.
  • வயதானவர்கள் உடல் பருமனாக இருப்பவர்கள் மற்றும் தோல் நிறம் கொண்டவர்களுக்கு 2000 இ.யூ. கட்டாயம் தேவை.

விட்டமின்-டி குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

  • குழந்தைகளுக்கு வைட்டமின்-டி குறை இருக்குமானால், ரிக்கட்ஸ் என்னும்  நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா எனப்படும் எலும்பு நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம். இதில்  எலும்பு இழப்பு அல்லது எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
  • பெரியவர்களுக்கு எலும்பு வலி, தண்டுவடவலி, குதிகால் வலி, சிறு மூட்டுகளில் வலி, உடல் சோர்வு ஆகிய பிரச்சினைகள் கூட ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

விட்டமின்-டி குறைபாட்டை தவிர்க்கும் வழிகள் என்ன?

விட்டமின்-டி குறைபாட்டை சரிசெய்ய மாத்திரைகள் ஊசிகள் ஏராளம் இருக்கின்றன. என்றாலும் நிரந்தரமான தீர்வு தேவை என்றால் இயற்கையான வழியில் தான் அடைய வேண்டும்.

  • துரித உணவுகளைத் தவிர்த்து இயற்கையான உணவுப் பழக்கம் பின்பற்ற வேண்டும். அதிக கால்சியம் நிறைந்த சோயா, பருப்பு வகைகள் ,பால் ,காய்கறிகள் எடுத்துக் கொள்வது நல்லது.
  • மூடிய அறையில் பல மணி நேரம் நிற்கக்கூடாது.  அவ்வப்போது வெளியே வந்து உடல் வெயிலில் படும்படி இருக்க வேண்டும்.
  • உடற்பயிற்சி, நடைபயிற்சி அவசியம். உடல் உயரத்திற்குத் தகுந்த எடையை பராமரிக்க வேண்டும்.
  • வெளியில் போகும்போது துப்பட்டாவால் முகம் முழுவதையும் மூடுவதும், சன்ஸ்கிரீன் அடர்த்தியாக பூசுவதும்  உங்கள் உடல்நலத்தை பாதிக்கும்.
  • கால்சியம், ஸ்டீராய்ட் மாத்திரைகள் எடுத்துக் கொள்வோர் மருத்துவர் ஆலோசனைகளுக்குப் பிறகு எத்தனை நாட்களுக்கு விட்டமின்-டி சத்து மாத்திரைகள் எடுக்க வேண்டுமோ அதனை தெளிவாக கேட்ட பிறகே எடுக்க வேண்டும்.