தேரையர் சொல்லிய நாள் ஒழுங்கு

Theraiyar-Naal-Ozhungu-1200x630.jpg

முதல் நாள் காலையில் இருந்து மறுநாள் காலை வரையிலும் நாள்தோறும் நாம் செய்யும் செயல்களை நாள் ஒழுக்கம் எனப்படுகிறது. இப்படி நாள் தவறாமல் நாம் கடைபிடிக்க வேண்டியவற்றை தேரையர் இங்கே சொல்லுகிறார். தேரையர் சொல்லிய நாள் ஒழுங்கு கீழே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் கண் விழித்தல்

உடலை ஆரோக்கியமாக வைத்திருந்து ஆயுள் பெருக்க சூரிய உதயத்திற்கு முன் காலை நான்கு மணியிலிருந்து 5 மணிக்குள்ளாக எழுந்திருத்தல் வேண்டும். சூரிய உதயத்திற்குப் பின் எழுந்தால் உடலில் சோம்பல் குடிகொள்ளும். காலை எழுந்தவுடன் கண்ணாடியில் நமது உருவத்தை நாமே பார்த்தால் நம் மனம் மகிழ்ச்சியடையும்.

தூய்மையான குடிநீர்

காலையில் எழுந்தவுடன் சுத்தமான குடிநீரை அருந்தினால் பித்தம் மிகுதியானது அடங்கும். மலம், சிறுநீர் தடைபடாமல் வெளியேறும்

கழிவுகள் கழித்தல்

தினமும் இருவேளை மலத்தையும், நான்கு முறை சிறுநீரையும் கடிப்பது நன்று. நீரை கழிக்கும்போது இடது கையால் வலது பக்க அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். மலம் கழிக்கும்போது வலக்கையால் இடப்பக்க அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். தினந்தோறும் மலம் சிறுநீரை சிக்கலில்லாமல் கழிப்பதால் வாத, பித்த, கப நாடிகள் தன் நிலையில் இருக்கும். நோய்கள் உடலை அணுகாது. உடலுக்கு சுகம் உண்டாகும்.

பல் சுத்தம் செய்தல்

காலை எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். துவர்ப்புச் சுவையுள்ள மூலிகை பொடிகள், இலைகள், கொம்புகளைக் கொண்டு பல் துலக்கி வர பல் தூய்மையாவது மட்டுமின்றி ஈறுகளும் கெட்டிப்படும். நாக்கு, வாய், தொண்டை சுத்தமாவதுடன், பல் நோய்கள் வராமல் தடுக்கப்படும். பல் துலக்க வேம்பு, அரசு, நாவல், அத்தி, விளா அசோகும், புங்கு, போன்ற மரங்களின் குச்சிகளைப் பயன்படுத்தி வரலாம்.

உடற்பயிற்சி

நம் உடலுக்கு வன்மையும், மனதிற்கு இனிமையும், அமைதியும் உண்டாக்கும் விதமாக உடற்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சியினால் உடலின் எல்லா உறுப்புகளும் இயக்கப்பட்டு வன்மை அடையும். ஆகையால் தண்டால், மல்யுத்தம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பசியினால் உடல் சோர்ந்து இருக்கும் போதும், உணவு சாப்பிட்டவுடனேயே உடற் பயிற்சிகள் செய்யக் கூடாது. உண்ட உணவு முற்றிலும் செரிமானமான பிறகு தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு காலை வேளையும், மாலை வேளையும் சிறந்தவை. பயிற்சியை காற்றோட்டமான இடத்தில் செய்ய வேண்டும். பயிற்சி முடித்த பின் வியர்வையை துடைத்து உடலைப் பிடித்து தொக்கணம் செய்துவிட்டு, அரை மணிநேரம் கழித்து தூய்மையான நீரில் குளித்துப் பிறகு சிற்றுண்டி உண்ணுதல் நலம்.

குளியல்

தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே குளித்தல் நன்று. மட்பாண்டங்களில் நீரை நிரப்பிக் கொண்டு உடல் முழுவதும் நனையும்படி தலையில் நீர் ஊற்றிக் குளிக்கவேண்டும். பஞ்ச கற்ப விதிப்படி கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்பம் விதை, கடுக்காய் தோல், நெல்லிப்பருப்பு இவைகளை காராம் பசுவின் பால்விட்டு அரைத்து தலை முழுகி வர உடலை நோய்கள் அண்டாது.

உணவு

உயிரோடு சேர்ந்த இந்த உடலை வளர்க்கவும், காக்கவும், பல தொழில்கள் புரியவும், தொழில் புரிவதால் உடலுக்கு உண்டாகும் செல்களை புதுப்பிக்கவும் அறுசுவை உணவு அவசியம். உணவில் சுவை என்பது ஊட்டம் தரும் பகுதிகளின் இயற்கை அடையாளமாகும். அறுசுவைகளில் துவர்ப்புச் சுவைமிக்க உணவு ஆற்றலும், கார்ப்புச் சுவை மிக்க உணவு விரைவும், இனிப்புச் சுவை கொண்ட உணவு வளமும், உப்புச்சுவை தெளிவையும், கசப்பு மென்மையும், புளிப்பு மிக்க உணவு இனிமையும், கொடுத்து உடலை நலமுடன் பராமரிப்பு செய்யும்.

நாம் உண்ணும் அறுசுவை உணவானது கால்பங்கு கிருமிகளுக்கும், கால்பங்கு உடல் தீக்கும், கால்பங்கு உடலுக்கும், கால்பங்கு மலத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இவ்வாறு பகிர்ந்த உணவு உடல் தாதுக்களுக்கு வன்மை கொடுத்து எட்டாம் நாள் உடலுக்கு வலிமையை கொடுக்கும்.

பானம்

உண்ட கடினப் பொருட்களை உடைத்தும், வளைத்தும், செரிக்கச் செய்வதற்கும் அவை இரசமாக மாறி உடல் தாதுக்களை நன்றாகப் பரவவும் பானம் துணை புரிகிறது.

உடலின் கழிவுப் பொருட்களை கரைத்து சிறுநீர், வியர்வையாக வெளித்தள்ளுகிறது. உணவுக்கு முன் வெந்நீரையோ அல்லது தண்ணீரையோ குடித்தால் பசி மந்தப்படும். சாப்பிட்ட பின்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். நீரை குறைந்த அளவில் குடித்தால் தாகம், விக்கல், வயிற்றில் ஒரு விதத் துன்பம் ஏற்படும். அதிக அளவில் நீர் குடித்தால் நீர் மந்தம் என்ற குற்றம் ஏற்படும்.

உறக்கமும் ஓய்வும்

மனிதனின் உடல் எப்பொழுதும் பழுதுபடாது திடகாத்திரமாக இருக்க வேண்டுமென்றால் மனிதனுடைய உணவு, ஒழுக்கம், உறக்கம் ஆகிய மூன்றும் சரிவர இருக்க வேண்டும். தூங்குவதால் சகல உறுப்புகளும், மனமும், அமைதியடையும், ஓய்வு பெறும், சரீர வளர்ச்சி உண்டாகும்.

உறக்கத்தின் கால அளவு

குழந்தைப் பருவத்தில் 12 மணி நேரமும், 5 முதல் 15 வரையான இளம்பிள்ளை பருவத்தில் எட்டு முதல் பத்து மணி நேரமும், 16 வயது முதல் 30 வயது வரையான இளமைக் காலத்தில் ஏழு மணி நேரமும், 30 வயது முதல் 50 வயது வரையான நடுத்தர வயது காலத்தில் 8 மணி நேரமும், 50 வயதிற்கு மேல் எட்டுமணி நேரம் கட்டாயம் உறங்கிய ஆக வேண்டும்.

இவற்றையெல்லாம் தினசரி வாழ்வில் அவசிய கடமைகள் என்றில்லாமல் மனித வாழ்வின் அனுதினமும் போற்றி கைகொள்ள வேண்டிய நல்லொழுக்கங்களாக, நாள் ஒழுக்கங்களாக மேற்கொண்டால் ஆரோக்கியத்துடன் ஆனந்த வாழ்வு வாழலாம்.