உடற்பயிற்சிக்கு சிறந்தது ஓட்டமா மிதிவண்டி ஓட்டுதலா – ஒரு ஒப்பீடு

VYM-Cycling-or-Running-1200x630.jpg

உடற்பயிற்சிக்கு மிகவும் ஏற்ற செயல்களாக மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் ஓடுதல் ஆகிய இரண்டையும் சொல்லலாம். இவை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமானவை என்றாலும் இரண்டு உடற்பயிற்சிகள் உடலுக்கும் நல்வாழ்விற்கும் தனித்தனியான பலன்களை தருகின்றன. உடற்பயிற்சிக்கு சிறந்தது ஓட்டமா மிதிவண்டி ஓட்டுதலா? ஒரு ஒப்பீட்டை இங்கே அலசலாம்.

ஓடுவதன் மூலம் சைக்கிள் ஓட்டுவதை விட அதிகப்படியான கலோரிகளை எரிக்க முடியும். ஆனால் அதன் மூலமாக உங்கள் உடல் உறுப்புகள் மற்றும் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் காரணமாக ஏற்படக்கூடிய வலியும், தசைப்பிடிப்பும் வர வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது உடலில் நிறைய காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளன.

நீங்கள் சைக்கிள்களில் உங்கள் அலுவலகத்திற்கு செல்லும் போது, உடலில் உள்ள கலோரிகள் அதிக அளவில் எரிக்கப்படுவதுடன், உங்களுக்கு குறைந்த அளவே சோர்வை ஏற்படுத்தும். அதனோடு உங்களுக்கு ஒரு போக்குவரத்து சாதனம் கூட கிடைத்துவிடுகிறது.

ஆனால் வேலைக்கு ஓடிச் செல்வதை எண்ணிப் பார்க்கும் போதே நம்மவர்கள் பலரும் நாம் போட்டிருக்கும் பார்மல் சட்டையை பாதுகாக்க கூட அது உதவாதே என்று எண்ணத்தோன்றும். நீங்கள் ஓட முடிவெடுத்தால் அதற்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். ஆனால் சைக்கிள் ஓட்ட நினைத்தால் காய்கறி கடைக்கு செல்ல, பில் கட்டுவதற்கு செல்ல, பால் வாங்குவதற்கு செல்ல, என பல வழிகளில் உங்கள் தினசரி செயல்பாடுகளுடன் அதனை இணைத்து விட முடியும்.

இங்கே சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஓடுதல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள சில அடிப்படையான வேறுபாடுகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்ற அளவீட்டை கையில் எடுக்கும் போது, ஓடுவதை விட சைக்கிள் ஓட்டுவது அதிக மகிழ்ச்சியை தரும் உடற்பயிற்சியாகவே உள்ளது. தொலைவாக செல்லும் வேளைகளில் ஓடுவதை விட, சைக்கிள் ஓட்டுவது குறைந்த வலி தரும் விஷயம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை ஆகும். மனதுக்கு அமைதி தரும் பாதையில் ஓடிக் கொண்டே ரசிப்பதை விட, சைக்கிள் ஓட்டிக்கொண்டே ரசிப்பது நடைமுறையில் சிறந்த அனுபவம் ஆகும்.

திறன்

குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிப்பதால் சிறந்த உடற்பயிற்சியாக இருப்பது ஓடுவது தான். ஒரே கால அளவில், சைக்கிள் ஓட்டுவதை விட, ஓடுவதன் மூலம் 15%-20% அதிகமான கலோரிகளை எரித்து விட முடியும். உங்களுக்கு குறைவான நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க வேண்டிய அவசியம் இருந்தால் ஓடுங்கள்.

பயணம் செய்தல்

இந்த ஒரு விஷயம் சைக்கிள் ஓட்டுவதை மிகவும் நிலைநிறுத்தும் காரணமாக உள்ளது. இரண்டுமே உடற்பயிற்சி செயல்கள் தான் என்றாலும் கூட, நீங்கள் சைக்கிளை பயன்படுத்துவதால் ஓடும் நேரத்தை விட குறைந்த நேரத்தை எடுத்துக் கொண்டு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், இரண்டு மடங்கு வேகத்திலும் தொடர்ந்து செல்ல முடியும். பார்மல் உடைகளை அணிந்துகொண்டு அலுவலகத்திற்கு ஓடிச் செல்வது என்பது நடவாத காரியம்.

காயங்கள்

உங்கள் உடல் மற்றும் எலும்புகளில் ஏற்படும் நீண்டகால விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது ஓடுவது சற்றே உங்களை பின்னோக்கி இழுக்கிறது.

குறிப்பாக உங்களுடைய மூட்டுகள் அதிக அளவு வலியையும், ஓடுவதால் ஏற்படும் உராய்வையும் எதிர் கொள்கின்றன. சைக்கிள் ஓட்டும்போது அது உங்கள் மூட்டுகள் மற்றும் உடல் பகுதிகளை இதமாகவே வைத்திருக்கும் வகையில் பயன் படுவதால், காயங்கள் ஏற்படுவது மிகவும் குறைவே.

உடலை வளர்த்தல்

உடலின் கீழ்ப்பகுதிகள் – தொடை மற்றும் கால்களின் வளர்ச்சிக்கு சைக்கிள் ஓட்டுவது மிகவும் சிறந்த பயிற்சியாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடலின் கீழ் பகுதிகளை வலுவானதாக உருவாக்க முடியும். ஓட்டம் என்று வரும்போது உங்களுடைய உடல் மற்றும் தசைகளை நீட்டவும், அதைக் கொண்டு, உடலை உருவாக்கவும் முடியும். இதன் மூலம் உடலை வலுவாக்க முடியும்.

கட்டுமான வசதிகள்

இப்போதிருக்கும் வெளிப்புற கட்டுமான வசதிகளை பார்க்கும் போது, சரளை மண் சரிவுகளிலும், புல் படர்ந்த மலைகளில் ஓடுவதும் சிறந்த அனுபவமாக இருக்கும். சைக்கிள் ஓட்டுவதற்கோ நிலையான, சமதளமான இடம் இருந்தால் தான் நிலை தடுமாறாமல் சைக்கிள் ஓட்ட முடியும். நகரங்களிலும் குறைந்த வாகனப் போக்குவரத்து உள்ள சாலைகளில் மட்டுமே பாதுகாப்பாகவும், எந்த தடங்கலும் இன்றி உங்களால் சைக்கிள் ஓட்ட முடியும்.

செலவும், பராமரிப்பும்

இரண்டு விஷயங்களுமே மிகவும் செலவு குறைந்த நடவடிக்கைகளாக இருந்தாலும், ஓடுவதுதான் சைக்கிள் ஓட்டுவதை விடவும் செலவிலும், பராமரிப்பு செலவிலும் குறைவாக ஆகும் என்பது உண்மை. ஓடுவதற்கு ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும். குறைந்தது ஆறுமாதங்களுக்கு வேறு எந்த செலவுகளும் இருக்காது. சைக்கிள் ஓட்டுவதற்கு நிறைய மூலதனமும், தொடர்ந்து பராமரிப்பு செலவுகளும் வந்துகொண்டே இருக்கும் என்பதையம் மறக்கக்கூடாது.