காய் கனிகளில் அவரைக்காயின் பலன்கள்

VYM-avaraikkai.jpg

பல காய்கறிகளும் பல விதமான சத்துகளை நம் உடலுக்கு அளிக்கின்றன. காய்கறிகளில் உள்ள வைட்டமின்களும், தாதுக்களும் உடலுக்கு தேவையான ஊட்டத்தை அளிப்பது மட்டுமில்லாமல் அதில் உள்ள நார்ச்சத்துகள் செரிமானத்திற்கு உதவுகின்றன. காய்கறிகளின் வரிசையில் இப்போது அவரைக்காயைப் பற்றி பார்ப்போம்.

அவரைக்காயின் பலன்கள்

கண் பாதுகாப்பிற்கு அவரை

அவரைக்காயை  வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து, மங்கிய பார்வை தெளிவடையும். பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைக்காய்  அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

அவரை ரத்தத்தை சுத்தமாக்கும்

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காம சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல் போன்றவற்றைப் போக்கி  உடலுக்கும், மனதிற்கும் அமைதியைக் கொடுக்க வல்லது அவரை.

நீரிழிவை கட்டுப்படுத்தும் அவரை

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இது சளி, இருமல், சரும நோய்களை குணமாக்கும்.

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றி, தசை நார்களை வலுப்படுத்தும்.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான உறக்கம் கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும், ஆண்மை சக்தி அதிகரிக்கும், நினைவாற்றலைத் தூண்டும்.

அதிக ஊட்டச்சத்து நிறைந்தது அவரை

வைட்டமின், செப்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற தாது சத்துகளால் ரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.

மன அழுத்தம் போக்க அவரைக்காய்

அவரைக்காயில் அதிகமாக உள்ள எல்-டோப்பா  என்ற அமினோ அமிலம் தான் அதற்கு தனிச்சுவையை கொடுக்கிறது. அந்த அட்டகாசமான சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து மன அழுத்தம் போக்க உதவுகிறது.

பசியைப் போக்கும் அவரைக்காய்

அவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதில் புரதச்சத்தும் சேர்வதால் இந்த உணவைச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு நமக்கு கிடைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை பேருக்கும் அவரைக்காய்

அவரையில்  விட்டமின்-சி அதிகம் உள்ளதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நம்மை அண்டாது. வேறு சில நோய்களில் இருந்தும் இந்த அருமையான காய் நம்மை பாதுகாக்கிறது. அவரைக்காயை சமைத்து உண்டால் சுவையின்மை தீரும். இரவு உணவிற்கு சிறந்தது முற்றாத வெள்ளவரைகாய் ஆகும். இது கண் நோய்கள் மற்றும்  முக்குற்றத்தைக் குணமாக்கும் ஆற்றலுடையது.